Saturday 15 October 2016

students/Teacher's article on KALAM sir

கலாம் அவர்களுக்கு இக்கவிதைப் பூக்கள் சமர்ப்பணம் - 
                                                                                    திருமதி.அமுதா அவர்கள்  
[ Read in the assembly to dedicate the poem on his birth anniversary during 2015 October.]
விதைக்கப்பட்ட ஏவுகணை நாயகனே!
கடலுக்கருகில் மண் திடலுக்கு நடுவில் - உம் 
உடல் புதைக்கப்பட்டிருக்கலாம் -ஆனால் உம் 
உணர்வு புதைக்கப்பட்ட இடமோ, 
உன் கனவு விதைக்கப்பட்ட இடமோ 
கண்ணியமிக்க கோடி மாணவர்களின் 
நினைவுத் திடலில் அல்லவா!

மறைந்ததோ மாணவர்களின் மத்தியில்!
மறையாதிருப்பதோ மாணவர்களின் மதியில்! - நீர் 
வீழ்ந்ததோ வெள்ளி விழா மேடையில்!
வீழாதிருப்பதோ பலரின் வாழ்வு எனும் ஓடையில்! -
உம் ஈமச்சடங்கில் 
சாத்திர சம்ப்ரதாயம் மட்டுமா சங்கமித்தது!
சாதிக்கத் துடிக்கும் மாணவர் பலரின் 
சத்திய சமர்ப்பணமும் சங்கமித்ததே!

உன் இறுதிச் சடங்கில் அரசியல் பேசப்படவில்லை! - நீர் 
ஆணவமற்றவனாய் இருந்ததால்!
மதம் முன்னிறுத்தப்படவில்லை! - உம் 
மனம் முன் மாதிரியாய் இருந்ததால்!
கலை வேறுபடவில்லை 
விலையில்லாத் திறன் உம்மிடமிருந்ததால்!

இறக்கை இல்லாமல் - விண்ணில் 
பறந்த ஏவுகணையாய் நீர்!
பிறந்த மண்ணிற்கு பெருமை சேர்த்தீர்!
நீவிர் படைத்த 
செயற்கைக்  காலால் - மண்ணில் 
பறந்த மாற்றுத் திறனாளியின் மகிழ்வால் - நீவிர்   
பிறந்ததற்கே பெருமை சேர்த்தீரே!

பள்ளி வாசல் மட்டும் தொழுதிருந்தால் - உமக்கு 
அள்ளிக் கொடுத்திருப்பார் அல்லா அனைதருளையும்!
பள்ளி, வாசல் தொடும் மாணவன் மனத்தைத் தொட்டதால் 
எண்ணிலடங்கா பிள்ளை செல்வத்தை தந்தாரய்யா அல்லா!
நீர் கம்பிகளை அசைத்து இசைத்த வீணையின் ராகம் - எங்கள் 
நம்பிக்கைக்கு இசைத்த அன்னைத் தாலாட்டல்லவா! 

தடம் மாறும் மாணவர்கள் பலரும் - நீர் 
தடம் பதித்த பாதை கண்டு 
திடம் பெறும் இடம் எது தெரியுமா?
உம் அக்னி  சிறகுகளின் பக்கங்களன்றோ!

நடமாடும் அறிவியல் கண்காட்சியின் உறுப்பினரானீர் !
2020 வல்லரசு கனவு காண எம்மை வலியுறுத்தினீர்! 
பசுமை உலகின் பங்கு தாரரானீர் !
அயல் நாட்டில் படித்தவராயினும் 
வயல் வெளியில் உழைப்பவரின் உள்ளம் கவர்ந்தீர்!

உம் நடுவகிடு கேசமும் கூரிய நாசியும் 
குறுநகையும் வீறு நடையும் - உம்மை 
நேசித்த மாணவனின் தேசிய சின்னமன்றோ!-நீவிர் 
பேசிய சொற்கள் எங்களின் தேசிய கீதமன்றோ!
உன்னத தலைவா உறங்குங்கள் நிம்மதியாய்!
விழிப்புடன் கனவு காண்பதோடு 
உழைத்தும் வல்லரசாக்குவோம் 
இந்தியாவை நாங்கள் !

வாழ்க உம்  புகழ்!  வளர்க நம் இந்திய புகழ்!

பிறந்ததை சரித்திரமாக்கிய தலைவா! உம் பிறந்த நாளில் சூளுரை ஏற்கிறோம் இந்தியா வல்லரசாக!




 

No comments:

Post a Comment