1916ம் ஆண்டு செப்டம்பர் 16ம் தேதி மதுரையில் பிறந்தவர் எம்.எஸ். அவரது முழுப் பெயர் மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி. இவரதுபெற்றோர் சுப்ரமணிய அய்யர், சண்முக வடிவு அம்மாள். சுப்ரமணிய அய்யர் வழக்கறிஞர், சண்முகவடிவு அம்மாள் சிறந்த வீணை இசைக்கலைஞர். தாயாரிடம் இருந்த இசை ஞானம் எம்.எஸ்ஸுக்கும், அவரது சகோதரர் சக்திவேல், சகோதரி வடிவாம்பாள் ஆகியோருக்கும் கிடைத்தது.எம்.எஸ். வாய்ப்பாட்டில் கவனம் செலுத்தினார், சக்திவேல் மிருதங்கக் கலைஞர் ஆனார், வடிவாம்பாள் தாயார் வழியில் வீணைக் கலைஞர்ஆனார். தாயிடமிருந்து இசையை கற்றுக் கொண்ட அவர் 10 வயதில் எச்.எம்.வி. நிறுவனத்திற்காக பாடி சாதனை படைத்தார். தாயைத் தவிர மதுரைசீனிவாச அய்யர், மாயவரம் வி.வி.கிருஷ்ணஅய்யர் மற்றும் புகழ் பெற்ற கர்நாடக இசைப் பாடகர் செம்மங்குடி சீனிவாசய்யர்ஆகியோரும் எம்.எஸ்ஸுக்கு பாட்டு சொல்லிக் கொடுத்த குருக்கள். 13 வயதாக இருக்கும்போது தாயார் செல்லும் கச்சேரிகளுக்கெல்லாம் எம்.எஸ்ஸும் உடன் செல்ல ஆரம்பித்தார். 4 வருடங்கள் கழித்துஅதாவது 17வது வயதில் சென்னை மியூசிக் அகாடமியில் அவர் தனது வாய்ப்பாட்டு அரங்கேற்றத்தை நிகழ்த்தினார். அன்றே பல நூறுரசிகர்களையும் பெற்றார். அதன் பின்னர் எம்.எஸ்.உயரே போகத் தொடங்கினார். அவரது குரல் வசீகரத்தால் ஈர்க்கப்பட்ட திரையுலக பிரம்மா என்று அழைக்கப்படும்இயக்குநர் கே.சுப்ரமணியம் (நடன கலைஞர் பத்மா சுப்ரமணியத்தின் தந்தை) எம்.எஸ்ஸை திரையுலகுக்கு அழைத்து வந்து படங்களில்நடிக்க வைத்தார். அவர் நடித்த முதல் படம் சேவாசதன். அதன் பின்னர் 4 படங்களில் எம்.எஸ். நடித்தார். அதில் அதிகம் பிரபலமடைந்தபடம் மீரா. மீராவில் எம்.எஸ். பாடிய பாடல்கள் காலத்தால் அழியாதவை இன்றும் கூட கேட்டவுடன் மனதைக் கரைக்கும் வகையில் அமைந்தவை.எம்.எஸ்.ஸுக்கும் அவரது கணவர் சதாசிவத்திற்கும் 1940ல் திருமணம் நடந்தது. திருமணத்திற்குப் பின், கணவர் சதாசிவத்தின்வழிகாட்டுதலில் எம்.எஸ். மிகப் பெரிய உயரத்தை எட்டினார். சதாசிவம் ஒரு சுதந்திரப் போராட்ட வீரர். அவர் தனது மனைவி எம்.எஸ். உடன் காந்திஜியை சந்தித்தார். அதன்பின்பு கஸ்தூரிபாய் நினைவுஅறக்கட்டளைக்காக எம்.எஸ். 5 இசை நிகழ்ச்சிகளை நடத்தி நிதி திரட்டிக் கொடுத்தார். எம்.எஸ்ஸின் திறமைகளை செம்மையாக செதுக்கி அவரை புகழின் உச்சத்திற்கே கொண்டு சென்றார் சதாசிவம். நான் பெற்றவெற்றிகளுக்கெல்லாம், புகழுக்கெல்லாம், பரிசுகளுக்கெல்லாம் எனது கணவர்தான் முழுக் காரணம் என்று எம்.எஸ்ஸே பல முறைபெருமையுடன் கூறியுள்ளார். 1997ல் சதாசிவம் மரணமடைந்தார். அன்று முதல் எம்.எஸ். கச்சேரிகள் செய்வதை விட்டு விட்டார். வீட்டிலேயே முடங்கி விட்டார்.கணவரின் நினைவுகளுடன் அவர் வாழ்ந்து வந்தார். கர்நாடக இசையின் ராணியாக கோலோச்சி வந்த எம்.எஸ். பெறாத பட்டங்களோ, பரிசுகளோ கிடையாது எனக் கூறும் வகையில்அத்தனை உயர் பரிசுகளையும், பட்டங்களையும் பெற்று விட்டார் எம்.எஸ்.1974ல் மக்சேசே விருதைப் பெற்றார் எம்.எஸ். 1954ல் பத்மபூஷன் விருதைப் பெற்றார். மியூசிக் அகாடமி வழங்கும் சங்கீத கலாநிதி பட்டத்தை 1968ல் பெற்றார். இந்த விருதைப் பெற்றமுதல் பெண்மணி எம்.எஸ்.தான். 1966ல் ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் பாடும் வாய்ப்பு கிடைத்து, தனது வசீகர குரலால் சபையில் கூடியிருந்தவர்களைக் கட்டிப்போட்டார். அதோடு மறைந்த காஞ்சி பெரியவர் சந்திரசேகரேந்திர சரஸ்வதி எழுதிய பாடல்களையும், மறைந்த முதல்வர் ராஜாஜி உலக அமைதிக்காகஎழுதிய பாடல்களையும் எம்.எஸ்.தான் பாடினார். இங்கிலாந்து, ரஷ்யா, அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் பாடி கர்நாடக இசையின் பெருமையை உலகம் உணரச் செய்தார். இவற்றுக்கெல்லாம் உச்சமாக 1998ல் இந்தியாவின் உயரிய விருதான பாரதரத்னா விருதைப் பெற்றார் எம்.எஸ். இத்தனை பெருமைகளை உடையவராக இருந்தும் எம்.எஸ். சுப்புலட்சுமி மிகுந்த அடக்கமுடையவராக இருந்தார். இசை என்பது ஒரு கடல்.நான் ஒரு மாணவி என்று கூறினார். எம்.எஸ்ஸின் பாட்டுத் திறமையை காலங்கள் கடந்தும் நினைவூட்டும் வகையில் மீரா பஜன்கள், வெங்கடேச சுப்ரபாதம், குறையொன்றும்இல்லை, காற்றினிலே வரும் கீதம் ஆகிய பாடல்கள் வெளிப்படுத்தும். மகாத்மா காந்தியின் விருப்பப் பாடலான வைஷ்வணவ ஜனதோபாடலையும் எம்.எஸ். குரல் இன்னும் தூக்கிக் கொடுத்து இன்றும் பிரபலமான பாடலாக விளங்கி வருகிறது. 88 வயதில் இசைக் குயில் எம்.எஸ். மறைந்தாலும் இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு அவரது இசைக் குரல் மறையாமல் வாழ்ந்துகொண்டிருக்கும் என்பதில் ஐயமில்லை
No comments:
Post a Comment