Wednesday, 16 September 2015

உலக ஓசோன் தினம்

உலக ஓசோன் தினம் 

                     உலகில் உயிரினங்கள் உயிர்வாழ வான்பரப்பில் ஓசோன் படலம் ஆற்றிவரும் பணி மகத்தானது. நமது கண்ணுக்குப் புலப்படாத அந்த ஓசோன் படலத்திற்கு மானசீகமான நன்றிகளைத் தெரிவிக்கவும், இன்று நம்மை அறியாமல் எமது நடவடிக்கைகள் காரணமாக ஓசோன் படலத்திற்கு ஏற்பட்டு வரும் பாதிப்புகளை ஏனையவர்களுக்கும் உணரச் செய்யவும், அதே நேரத்தில் அதன் பாதுகாப்பின் அவசியத்தை உறுதி செய்யவும் ஆண்டுதோறும் உலக நாடுகள் செப்டம்பர் 16ம் தேதியை ஓசோன் தினமாக நினைவு கூறுகின்றன. 1987ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16ம் தேதி கனடா நாட்டின் தலைநகரில் ஓசோன் படையை அழிக்கும் ரசாயனங்களுக்கு எதிரான 'மொன்றியல்" உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டதையடுத்து அந்தத் தினமே 1995ம் ஆண்டு முதல் சர்வதேச ஓசோன் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. 1994ம் ஆண்டு டிசம்பர் மாதம் 19ம் தேதி ஐக்கிய நாடுகள் பொது சபையில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பூமியை அழித்து வரும் முக்கிய சுற்றுச்சூழல் பிரச்சினைகளை ஒருமுகப்படுத்தும் தினமாக இதனை அனுசரிக்க உலக நாடுகள் தீர்மானித்தன. ஓசோன் (Ozone) என்பது மூன்று ஒட்சிசன் அணுக்கள் சேர்ந்திருக்கும் ஒரு மூலக்கூறாகும். இது வளிமண்டலத்தின் மேல் வாயு நிலையில் காணப்படுகின்றது. இது ஒட்சிசனின் பிறிதொரு மாற்றுரு (allotrope) வாகும். இது ஈரணு ஒட்சிசன் மூலக்கூறு போல் நிலைத்தன்மை இல்லாதது. இலகுவாக சிதைந்து விடும் தன்மை கொண்டது. 1840ல் சி. எப். ஸ்கோன்பின் (Christian Friedrich Schönbein) என்பவர் ஓசோனைக் கண்டுபிடித்தார். அது ஒருவகையான மணம் தருவது என்ற அடிப்படையில் கிரேக்க மொழியில் மணத்தைக் குறிக்கும் (ozein, "மணத்தல்") ஓசோன் என்று பெயர் சூட்டினார். ஆனால் மூன்று ஒட்சிசன் அணுக்கள் சேர்ந்த விஞ்ஞானப் பெயரின் பொருள் ஓசோன் என்பது, இருபத்தைந்து ஆண்டுகள் கழித்து, 1865ல் ஜாக்ஸ் லூயிஸ் சோரெட் (Jacques-Louis Soret) என்பார் செய்த ஆய்வுக்கு முன்னர் அறியப்படவில்லை. இது பின்னர் சி. எப். ஸ்கோன்பின் அவர்களால் 1867 இல் உறுதி செய்யப்பட்டது. ஒரு இரசாயனப் பொருளின் மாற்றுருவாக (allootrope) அறியப்பட்டவற்றுள் ஓசோனே முதலாவதாகும். புவிக்கு அருகே காணப்படும் ஓசோன் சூழலில் மாசுத்தன்மை ஊட்டுவதாகக் கருதப்படுகிறது. ஏனெனில் மனிதர்கள் உட்பட, விலங்குகள் பலவற்றின் சுவாச செயற்பாட்டிற்கு கேடு விளைவிப்பதாக நிரூபிக்கப்பட்டிருப்பதே இதற்குக் காரணமாகும். ஆனால் புவியின் வளிமண்டலத்தின் மேல் மட்டங்களில் உள்ள ஓசோன் வளி, உயிரினங்களுக்கு தீங்கு விளைவிக்கும் புற ஊதாக் கதிர்களை தடுத்து, உலகில் பாயும் அளவைக் குறைக்கின்றது. சூரிய ஒளிக் கதிர்களில் நம் கண்ணுக்குத் தெரியாத ஒளிக்கதிர்கள் உள்ளன. இத்தகைய ஒளிக் கதிர்களை செங்கீழ்க் கதிர்கள், புற ஊதாக் கதிர்கள் என பிரிக்கலாம். செங்கீழ்க் கதிர்கள் சூரியனிடமிருந்து வெப்பத்தை சுமந்து வந்து பூமியை வெப்பம் அடையச் செய்கிறது. புற ஊதாக்கதிர்கள் பூமியில் மனிதர்களுக்கு மட்டுமல்லாது, விலங்கினங்களும் தாவரங்களும் மிகுந்த பாதிப்புகளை ஏற்படுத்துக்கின்றன. இத்தகைய தீமை விளைவிக்கும் புற ஊதாக்கதிர்களிடமிருந்து (UV) பாதுகாப்பு கவசமாக ஓசோன் படலம் செயற்படுகிறது.


No comments:

Post a Comment