Saturday, 25 July 2015

கார்கில் போர் வெற்றி தினம் இன்று


கார்கில் போர் வெற்றி தினம் இன்று


                      இந்தியாவின் ஜம்மு காஷ்மிர் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள கார்கில், திரஸ் பகுதியின் மலைச் சிகரங்கள், படாலிக் மற்றம் சோர்பாட்லா போன்ற பகுதிகளில் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்டி பாகிஸ்தான் ராணுவம் மற்றும் தீவிரவாதிகள் கூட்டாக ஒன்று சேர்ந்து 1999-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஊடுருவினர். ஜம்மு காஷ்மிர் மாநில எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டின் சில இடங்களில் குளிர் காலத்தின் போது சில மாதங்களுக்கு இரு நாடுகளின் தரப்பிலும் எல்லைப் பாதுகாப்பு படை தற்காலிகமாக விலக்கிக் கொள்ளப்படும். பாகிஸ்தான் ராணுவமும் தீவிரவாதிகளும் அந்த சமயத்தை பயன்படுத்தி இந்திய எல்லையைச் சேர்ந்த சிகரங்களை ஆக்கிரமித்தனர். இந்திய ராணுவம் ”ஆப்பரேஷன் விஜய்” என்ற பெயரில் ராணுவ நடவடிக்கை எடுத்தது. மலை முகடுகள் மற்றும் சிகரங்களில் போர் நடந்ததால் இந்திய ராணுவத்திற்கு படைத்தளவாடங்களைக் கொண்டு செல்ல கடினமாக இருந்தது. “ஸ்ரீநகர்“ மற்றும் “லே“ பகுதியை இணைக்கும் NH-1D தேசிய நெடுஞ்சாலையை மிகவும் உயரமான பகுதிகளிலிருந்து பாகிஸ்தான் படையினர் தாக்கினர். இந்தியப் படையினர் முன்னேறிச் செல்வது பெரும் சவாலாக இருந்தது. இந்திய வான் படை மே மாதம் 26-ல், MIG-21, MIG-27, MI-17 போர் விமானங்கள் மூலமாக சிகரங்களின் உச்சியில் பதுங்கியிருந்த பாகிஸ்தான் படையினரை தாக்கியது. இந்திய ராணுவம் ஜூன் 29-ல் டைகர் ஹில்ஸ் மலைப்பகுதிக்கு அருகில் அமைந்துள்ள பாய்ண்ட் 5060 மற்றும் 5100 மலைச் சிகரங்களை கைப்பற்றியது. ஜூலை 4-ல் முக்கிய சிகரமான டைகர் ஹில்சை தொடர்ச்சியாக 11 மணி நேரத் தாக்குதலுக்குப்பின் மீட்டது இந்திய ராணுவம். இரண்டு மாதமாக நடந்தப் போரில், இந்திய வீரர்கள் தீரத்துடன் போரிட்டு பாகிஸ்தான் படையினரை முழுமையாக இந்திய எல்லையிலிருந்து விரட்டியடித்தனர். ஜூலை-26 போர் முடிவுற்றது. இந்நாளினை “கார்கில் வெற்றி தினமாக“ நாட்டிற்காக தங்கள் இன்னுயிரை நீத்த ராணுவத்தினர் ஒவ்வொருவரின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் இதே நாளில்(ஜூலை-26) இந்திய அரசு கார்கில் தினத்தை அனுசரிக்கிறது.

1 comment:

  1. Jai Hindh! Lets Salute Our Amar Jawans

    ReplyDelete