Wednesday, 1 July 2015

தேசிய மருத்துவர் தினம் இன்று


                                     டாக்டர்களின் தன்னலமற்ற சேவையினைப் போற்றும் விதமாகவும், டாக்டர் பி.சி ராயின் அர்ப்பணிப்பு உணர்வு, பொதுச் சேவை, ஈகை குணம் ஆகியவற்றின் நினைவாகவும் அவரின் பிறந்த நாளான இன்று நம் நாட்டில் தேசிய மருத்துவர் தினம் கொண்டாடப்படுகிறது. ராய் பீகார் மாநிலம் பாட்னா அருகே உள்ள பாங்கிபோர் எனும் ஊரில் 1882-ஆம் ஆண்டு ஜூலை 1-இல் பிறந்தார். கொல்கத்தாவில் மருத்துவப் பட்டம் பெற்று லண்டனில் MRCP மற்றும் FRCS படிப்பை முடித்து இந்தியாவிற்குத் திரும்பி ஏழை எளிய மக்களுக்கு மருத்துவ சேவை செய்தார். அந்நாட்களில் நடந்த காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்க போராட்டங்களிலும் பங்கெடுத்துள்ளார். இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். 1948-ஆம் ஆண்டு மேற்கு வங்க மாநிலத்தின் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். முதலமைச்சர் பணியிலிருந்தாலும் தன் மருத்துவ சேவையினை தொடர்ந்து செய்து வந்தார். 1961-ஆம் ஆண்டு இவரது மருத்துவ சேவையைப் பாராட்டி இந்தியாவின் உயரிய குடிமை விருதான பாரத் ரத்னா விருது வழங்கி இந்திய அரசு கௌரவித்தது. இந்தியாவின் மக்கள் தொகை விகிதத்திற்கு ஏற்ப மருத்துவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. இருப்பினும் அரசுப் பொது மருத்துவ மனைகளிலும், மருத்துவ முகாம்கள் அமைத்தும், அவ்வப்போது பரவும் நோய்களைப் பற்றி விழிப்புணர்வு செய்வதுடன் நேரம் கருதாது மக்களுக்கு மருத்துவ சேவை ஆற்றும் மருத்துவர்கள் போற்றப்பட வேண்டியவர்கள் ஆவர்.



 நன்றி : -  https://www.facebook.com/yenipathipagam

No comments:

Post a Comment